திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்

வடலூர் - 607303

திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்

திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர்

திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர்

தலபெருமை

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் சிரம்பரத்திற்கு வடமேற்கே 20 கி.மீ தொலைவில் உள்ள மருதூரில் திருஅருட்பிரகாச வள்ளலார் அவதரித்தார்கள். பெருமானாரைப் பிள்ளையாகப் பெறும் பேறுபெற்ற பெற்றோர் இராமையபிள்ளை, சின்னம்மையார் என்போர். இவர்கள் சமயம் - சைவம். குலம் - வேளாண்குலம். மரபு - கருணீகர் மரபு. இராமைய பிள்ளை மருதூரின் கிராமக் கணக்கர். பிள்ளைகளைக் கூட்டிப்பாலஞ் சொல்லும் ஆசிரியராகவும் விளங்கினார். சின்னம்மையார், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரிக்கு அருகிலுள்ள சின்ன காவணத்தில் பிறந்த வளர்ந்தவர். இராமைய பிள்ளைக்கு ஆறாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டவர். ஐந்து மனைவியரும் மகப்பேறின்றி ஒருவர்பின் ஒருவராக இறக்கவே இராமைய பிள்ளை இவரை ஆறாவதாக மணம் முடித்தார். இவர்களுக்கு சபாபதி, பரசுராமன் என்னும் இரு ஆண் மக்களும் உண்ணாமூலை, சுந்தராம்பாள் என்னும் இரு பெண்மக்களும் பிறந்தனர்.

1823, அக்டோபர் 5, சுபானு ஆண்டு புரட்டாசித் திங்கள் இருபத்தோராம் நாள் சித்திரை விண்மீன் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.54 மணியளவில் பெருமானார் ஐந்தாவது மகவாக அவதரித்தார்கள். பெற்றோர்கள் பிள்ளைக்கு இராமலிங்கம் எனப் பெயரிட்டனர்.

ஆறாவது திங்களில் இராமையாபிள்ளை காலமானார். சின்னம்மையார் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தாம் பிறந்த பொன்னேரிக்கு சென்றார். சிலகாலம் பொன்னேரியில் வாழ்ந்த பின் தம்மக்களுடன் சென்னைக்கு குடி பெயர்ந்தார். மூத்த மகனாகிய சபாபதி பிள்ளை, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் பயின்று சொற்பொழிவாற்றுதலில் வல்லராகிக் குடும்பத்தை நடத்தி வந்தார். அவர் வள்ளலாருக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்திருந்தபோதிலும் வள்ளற்பெருமானுக்கு கல்வியில் நாட்டம் ஏற்படவில்லை. அவர் மற்ற சிறுவர்களைப் போல் வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடவும் இல்லை. அவரது எண்ணமெல்லாம் இறை வழிபாட்டிலும், இறையருளை நாடுவதிலும் மட்டுமே இருந்தன. தவிர, வள்ளலாருக்கு இளமையிலேயே தமிழில் அற்புதமான புலமை இருந்தது. சிறுவயதிலேயே பல இறைப்பாடல்கள் புனைந்தார். ஒரு கட்டத்தில் வள்ளலாரின் தமையனாருக்கு வள்ளற்பெருமானின் மகிமை விளங்கியதால் அவரது போக்கிலேயே விட்டுவிட்டார்.

வள்ளலாருக்கு இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு இல்லையெனினும் குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கு இணங்கி மணம் புரிந்து கொண்டார். எனினும், சராசரி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவில்லை. வள்ளற்பெருமானே தனது பாடல்களில் தாம் ஒன்பது வயதில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டதையும் பன்னிரு அகவையால் தம் ஞான வாழ்க்கை தொடங்கியது பற்றியும் தெரிவித்துள்ளார். ஆரம்ப கால கட்டங்களில் அவர் பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தபோதிலும் பின்னாளில் சமய மத தெய்வங்களை விடுத்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வணங்கினார்.

1858-ல் வள்ளலார் சென்னையிலிருந்து கிளம்பிச் சென்று அவரது சொந்த ஊரான மருதூரின் அருகே உள்ள கருங்குழி என்னும் சிற்றூரில் உறையத் தொடங்கினார். பலரின் நோயைத் தீர்த்தது, நீரால் விளக்கெரித்தது, வெறுங்கையால் மண்ணை தோண்டி நீரூற்றை வரவழைத்தது முதலிய பல்வேறு அதிசயங்கள் அவரால் அங்கு நிகழ்த்தப்பட்டன.

வள்ளற்பெருமான் தமது கொள்கைகளான ஜீவகாருண்ணியம், கொலை புலை தவிர்த்தல், ஒரிறை வழிபாடு முதலியவற்றை பரப்புவதற்காக 1865-ல் சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தார். அதேபோல், ஏழை எளியோர்களின் பசியாற்றும் பொருட்டு 1867-ல் வடலூரில் தருமச்சாலை தொடங்கினார்.

காலப்போக்கில் வள்ளலார் தனது நெருங்கிய சீடர்களே தமது கொள்கையை அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பின்பற்றாததாலும், மக்கள் கூட்டம் வடலூரில் குவியத் தொடங்கியதாலும், தனிமையை நாடி அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்தை தேர்ந்தெடுத்து அங்கு உறையத் தொடங்கினார். அங்கு தாம் தங்கியிருந்த இல்லத்திற்கு சித்தி வளாகம் என்று பெயரும் இட்டார். பெயருக்கு ஏற்றாற்போல் அவ்விடம் அவருக்கு சித்தியடைவதற்கான இடமாகவே இருந்தது. வள்ளலார் சாகா வல்லமையும், முத்தேக சித்தியும் பெற்றவர். அவ்வுடலையே ஆண்டவர் உறைவிடமாக மாற்றி இறையோடு ஒன்றறக் கலந்தவர். தம் வாழ்க்கை நிலை, தாம் கண்டறிந்த உண்மைகள், அனுபவங்கள் ஆகியவற்றை அவர் பல்வேறு பாடல்களாக வடித்துள்ளார். அவை திருவருட்பா என்னும் பெயரில் தொகுக்கப்பட்டன. அவர் தம் அக அனுபவத்தின் புற வெளிப்பாடாக சத்திய ஞான சபை கட்டியருளினார்.

வள்ளலார் ஸ்ரீமுக வருடம் தைப்பூசத்தன்று (ஜனவரி 30, 1874) சித்தி வளாகத்தில் உள்ள தமது அறைக்குள் சென்று திருக்காப்பிட்டுக் கொண்டு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரானார். வள்ளற்பெருமானார் இன்றளவும் சன்மார்க்கத்தை நடத்துவிப்பவராகவும், சன்மார்க்கிகளுக்கு தோன்றாத்துணையாகவும் இருந்து வழிநடத்தி வருகிறார்.

" அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "

சமீபத்திய செய்திகள் 

153-ஆவது தைப்பூசஜோதி தரிசனப் பெருவிழா அழைப்பிதழ்

இங்கே கிளிக் செய்க


கோவில் விவரங்கள்

கோவில் பெயர் : திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்

நகரம் : வடலூர்

மாவட்டம் :கடலூர்

மாநிலம் : தமிழ்நாடுவரலாறு

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் சிரம்பரத்திற்கு வடமேற்கே 20 கி.மீ தொலைவில் உள்ள மருதூரில் திருஅருட்பிரகாச வள்ளலார் அவதரித்தார்கள். பெருமானாரைப் பிள்ளையாகப் பெறும் பேறுபெற்ற பெற்றோர் இராமையபிள்ளை, சின்னம்மையார் என்போர்.தொடர்பு

திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்
வடலூர்
vallalardheivanilayam@gmail.comகோயில் விவரங்கள்

திரு அருட்பிரகாச வள்ளலார் கோயில்

வடலூர் - 607303

vallalardheivanilayam@gmail.com

Maintained By

AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,

kumbakonam - 612001

Designed by AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,

Designed by

AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,