திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்

வடலூர் - 607303

திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்

வரலாறு

வரலாறு

வள்ளற் பெருமானாரின் தனிப்பெரும் அருட்பணிகள்


வள்ளற் பெருமானாரின் தனிப்பெரும் அருட்பணிகள்

 • சமுதாயத்திலும், மதத்திலும் வேறூன்றிவிட்ட கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போக அரும்பாடு பட்டார்கள்.
 • முதன் முடலாக திருக்குறள் வகுப்பு நடத்தினார்கள்.
 • முதன் முதலில் முதியோர் கல்வியை ஏற்படுத்தினார்கள்.
 • முதன் முதலில் மும்மொழிப் பாடசாலையைத் (தமிழ், ஆங்கிலம், இந்தி) தமிழ்நாட்டில் ஏற்படுத்தினார்கள்.
 • தமது கொள்கைக்கென்று தனி ஒரு மார்க்கத்தை சன்மார்க்கத்தை ஏற்படுத்தினார்கள்.
 • தனது மார்க்கத்திற்கென்று தனிக்கொடி கண்டார்கள். (சன்மார்க்கக் கொடி)
 • தமிழ்நாட்டின் முதல் கல்வெட்டு ஆரய்ச்சியாளர் பெருமானார் ஆவார்கள்.
 • தருமச்சாலையை நிறுவி சாதி, மதம், இனம், மொழி, தேசம் முதலிய எந்தவித பேதமின்றி அன்னதானம் வழங்கினார்கள்.
 • சடங்குகள் இல்லாத நிலையில் இறைவனை ஜோதி வடிவில் வழிபட வேண்டும், என்பதற்க்காகவே சத்திய ஞான சபையை நிறுவினார்கள்.
 • பெருமானார் கண்ட ஆன்மநேய ஒருமைப்பாட்டு நெறிக்கு மேல் ஒரு நெறி இல்லை.
 • அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்று பெருமானார் அருளிய மகா மந்திரத்திற்க்கு இணையான மந்திரம் ஒன்றும் இல்லை.

 • சன்மார்க்க நெறியை உரைத்ததோடு அல்லாமல் அதன்படி வாழ்ந்து காட்டினார்கள். அதன் பயனாக அருட்பெருஞ்ஜோதியானவர் நம் வள்ளற்பெருமானார் ஒருவரே ஆவார்கள். வள்ளற்பெருமானாரின் வரலாற்றைக் கற்று அதன் வழி நடந்து நாமும் அருட்பெருஞ்ஜோதியாக வேண்டும். மற்றவர்களையும் ஆக்க வேண்டும்.

வள்ளற் பெருமானாரின் வரலாற்றை அறிவதற்கான மூலங்கள்


வள்ளற் பெருமானாரின் வரலாற்றை அறிவதற்கான மூலங்கள்

சிதம்பரத் தரிசனம்


சிதம்பரத் தரிசனம்

பிறந்த குழந்தைகளை முதன் முதலில் கோயிலுக்கு எடுத்து சென்று வழிபடுவது வழக்கம். அவ்வாறே பெருமானார் அவதரித்த ஐந்தாம் திங்களில் இராமையபிள்ளை மனைவி மக்களுடன் சிதம்பரம் சென்று வழிபட்டார், சிற்சபையில் நடராட பெருமானை வழிபட இரகசிய தரிசனத்துக்காக அனைவரும் முன் வந்து நின்றனர். பிள்ளைப் பெருமான் தாயின் கையிலிருந்தார். தீஷிதர் திரையை தூக்க சிடம்பர இரகசியம் தரிசனமாற்று. அனைவரும் தரிசித்தனர். கைக் குழந்தையாகிய பெருமானாரும் தரிசித்தனர். அனைவருக்கும் இரகசியமாயிருந்த சிதம்பர இரகசியம் ஐந்து மாதக் குழந்தையாகிய பெருமானார்க்கு வெட்ட வெளியாகப் புலப்பட்டது. இறைவன் இரகசியத்தை வெளிப்படையாகக் காட்டியருளினான். இவ்வாறு பெருமானார் ஒராண்டுப் பருவத்தில் பூர்வஞான சிதம்பரமாகிய தில்லையில் ஒரு திரை தூக்கத் தாம் வெளியாகக் கண்ட அனுபவப் பொருளையே தமது நாற்பத்தொன்பதாம் அகவையில் உத்தரஞான சிதம்பரமாகிய வடலூரில் சத்திய ஞானசபையில் எழுதிரை நீக்கி ஒளியாகக் காட்டியருளினார்கள்.

தாய்முதலோ ரொடு சிறு பருவமிதில் தில்லைத்
தலைத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
வேய்வகைமேல் காட்டாதே என் தனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டிய என் மெய் உறவாம் பொருளே
காய்வகைஇல் லாதுளத்தே கனிந்த நறுங் கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக்களிப்பே
தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
சோதி நடத்தரசே என் சொல்லும் அணிந் தருளே
-ஆறாம் திருமுறை அருள்விளக்க மாலை

குடும்பம் சென்னை செல்லல்


குடும்பம் சென்னை செல்லல்

ஆறாவது திங்களில் இராமையாபிள்ளை காலமானார். சின்னம்மையார் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தாம் பிறந்த பொன்னேரிக்கு சென்றார். சிலகாலம் பொன்னேரியில் வாழ்ந்த பின் தம்மக்களுடன் சென்னைக்கு குடி பெயர்ந்தார். மூத்த மகனாகிய சபாபதி பிள்ளை, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் பயின்று சொற்பொழிவாற்றுதலில் வல்லராகிக் குடும்பத்தை நடத்தி வந்தார்.

ஓதாதுணர்தல்


ஓதாதுணர்தல்

பிள்ளைப் பெருமான் பள்ளிப்பருவம் எய்தியதும் தமையனார் சபாபதி பிள்ளை தாமே கல்விப் பயிற்சியைத் தொடங்கிவைத்தார். இளைய பெருமானாரின் அறிவுத் தரத்தையும், பக்குவ நிலையையும், கந்தகோட்டஞ் சென்று கவி பாடித் துதித்தலையும் கண்ட மகாவித்துவான், இவ்விளைஞர் கல்லாதுணரவும், சொல்லாதுணர்த்தவும் வல்லவரென்று உணர்ந்து கற்பிப்பதைக் கைவிட்டார். பெருமானார் எப்பள்ளியிலும் பயின்றதில்லை; எவ்வாசிரியரிடத்தும் படித்ததில்லை.கற்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கற்றார். கேட்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார். பெருமானின் கல்வியும் கேள்வியும் இறைவனிடத்துப் பெற்றதேயொழிய வேறு எவ்வாசிரியரிடத்தும் பெற்றதன்று. இறைவன் பெருமானாரைப் பள்ளியில் பயிற்றாது தானே கல்வி பயிற்றினான். 'குமாரப் பருவத்தில் என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரை இன்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்விப்பயிற்சியை எனது உள்ளகத்தே இருந்து பயிற்றிவித்தருளினர்' (பெரு விண்ணப்பம்). 'கற்றது நின்னிடத்தே, பின் கேட்டது நின்னிடத்தே', 'பள்ளி பயிற்றாது எந்தனைதக் கல்வி பயிற்றி முழுதுணர்வித்து', 'ஓதாதுணர உணர்த்தி உள்ளே நின்றுளவு சொன்ன நீதா', 'ஓதுமறை முதற் கலைகள் ஓதாமல் உணர உணர்விலிருந்து உணர்விலிருந்து உணர்த்தி', 'ஓதாதனைத்து முணர்கின்றேன்', 'ஓதாதுணர்ந்திட ஒளி அளித்தெனக்கே' என்னும் வள்ளல் பாடல்கள் மூலம் ஓதாது உணர்ந்ததை உணரலாம். முற்பிறப்புகளிலேயே சரியை கிரியை யோகம் ஞானங்களை முடித்து இப்பிறப்பில் அருள்நிலை நின்று சித்திபெற்தற்கென்றே அவதரித்த அருள் சித்தராதலின் பெருமானார் இளமையிலேயே ஓதாதுணரப் பெற்றார். ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து என்னும் குறள்மொழி பெருமானார்க்கு முற்றும் பொருந்துவதாம்.

ஆடல் செய்யும் பருவத்தே பாடல் செய்யத் தொடங்குதல்


ஆடல் செய்யும் பருவத்தே பாடல் செய்யத் தொடங்குதல்

வீதியிலே விளையாடித் திரியும் சிறு பிள்ளைப் பருவத்திலேயே பெருமானார் அருட்பாடல்களைப் பாடும் வல்லமை பெற்றிருந்தார்கள். "உருவத்திலே சிறியேனாகி ஊகத்தில் ஒன்றுமின்றித் தெருவத்திலே சிறுகால் வீசி ஆடிடச்செய்தாய்", பாடும் வகை அணுத்துணையும் பரிந்தறியாச்சிறிய பருவத்தே அணிந்தணிந்து பாடும் வகை புரிந்து", "ஐயறிவிற் சிறிதும் அறிந்தனுபவிக்கத் தெரியாதழுது களித்தாடுகின்ற அப்பருவத்தெளியேன் மெய்யறிவிற் சிறந்தவரும் களிக்க உனைப்பாடி விரும்பி அருள்நெறி நடக்க விடுத்தனை" ஏதும் ஒன்றறியாப் பேதையாம் பருவத்தெனை ஆட்கொண்டெனை உவந்தே ஓதும் இன்மொழியில் பாடவே பணித்த ஒருவனே", வெம்மாலை சிறுவரொடும் விளையாடித் திரியும்மிகச்சிறிய பருவத்தே நினை நமது பெம்மான் என்றடி குறித்துப் பாடும் வகை புரிந்த பெருமானே", "வீதியிலே விளையாடித் திரிந்த பிள்ளைப் பருவம் மிகப்பெரிய பருவமென வியந்தருளி அருளாம் சோதியிலே விழைவுறச்செய்தினிய மொழிமாலை தொடுத்திடச்செய்தணிந்து கொண்ட துரையே" என்பன மேற்கூறியதற்கான சான்றுகளாகும்.

கந்தகோட்ட வழிபாடு


கந்தகோட்ட வழிபாடு

பிள்ளைப்பருவத்தில் பள்ளிசென்று பயிலாதும்வீட்டில் தங்காதும் இருந்த பெருமானார் நாள்தோறும் கந்தக் கோட்டத்திற்கு சென்று வழிங்கப்பட்ட அதனைக் கந்தக்கோட்டம் என்று வழங்கத் தொடங்கியவர் வள்ளற்பெருமானாரே.

கண்ணாடியில் காட்சிபெறல்


கண்ணாடியில் காட்சிபெறல்

தம்மிடம் படிக்காதும், தமதாசிரியர் மகா வித்துவான் சபாபதி அவர்களிடம் பயிலாதும், வீடுதங்காதும், கோவில் குளங்களை சுற்றிக்கொண்டு ஆடிப்பாடிடும் தம்பியின் போக்கு, தமையனார் சபாபதிக்குப் பிடிக்கவில்லை. பலமுறை கண்டித்தும் கேளாமையால் இனி தம்பிக்கு வீட்டில் உணவளிக்க வேண்டாமென மனைவியாரிடம் கூறிவிட்டார். பிள்ளைப் பெருமானுக்கு இது நல்லதாயிற்று. வீட்டுக்கே வராமல் சிறுவர்களை சேர்த்துக் கொண்டு நாள் முழுவதும் கோவில் குளங்களுக்கே செல்பவரானார். பிள்ளைப் பெருமானிடத்து அன்புமிக்க அண்ணியாகிய பாப்பாத்தியம்மையாரோ ஒருபுறம் கணவர் தம்பியைக் கைவிடுவதற்கு மனமில்லாதவராய்ச்சில சிறுவர்களை ஏவிப் பிள்ளைப் பெருமானை அழைத்துவரச்செய்து தமையனார் இல்லாதபோது அவரறியாமல் வீட்டுக்குவந்து ஒருவேளையாவது உண்டு போகும்படி அன்போடு அறிவுறுத்தி அனுப்பினார். பிள்ளைப் பெருமானும் அவ்வாறே நாள்தோறும் பிற்பகலில் தமையனார் இல்லாதபோது வீட்டிற்கு வந்து அண்ணியாரிடம் உண்டு சென்றார். சின்னாளில் சபாபதி இதனை அறிந்தாரேனும் கண்டும் காணாதது போல் இருந்துவிட்டார். இங்ங்கனம் நாட்கள் பல சென்றன. ஒருநாள் தந்தை இராமையாவின் திதி வந்தது. வீட்டில் விருந்து சிறப்பாக நடைபெற்றது. தம்பியார் உடனிருந்து உண்பதற்கில்லையே என்று சபாபதி வருந்தினார். எனினும் மாலையில் வந்து அண்ணியால் உண்பிக்கப் படுவரென்பதை எண்ணி ஒருவாறு உளந்தேறியிருந்தார். மாலையில் பெருமானார் வீட்டிற்கு வந்தார். அண்ணியார் உண்பிக்க உண்டார். உண்ணுங்கால் அண்ணியார் கண்ணீர் வடிப்பதைக் கண்டார்; காரணம் கேட்டார். உன்னைத் தான் நினைத்து வருந்துகிறேன். அண்ணார் சொற்படிக் கேட்டு வீட்டிலேயே தங்கிப் படிப்பதாயிருந்தால் இவ்வளவு துன்பம் இல்லையே, என்று அண்ணியார் வருந்திக் கூறினார். அண்ணியாரின் கண்ணீரைக்காணப் பெறாது கவன்ற பெருமானார் நாளை முதல் வீடுதங்கிப் படிப்பதாகக் கூறிச்சென்றார்; மறுநாளே வீட்டிற்கு வந்தார். தமது விருப்பப்படி தமக்கென ஒதுக்கப் பெற்றிருந்த மேல்மாடி அறையில் கைநிறைய புத்தங்களோடும், பூசைப் பொருள்களோடும் புகுந்தார். அறைக் கதவை மூடிக்கொண்டு பொருள்களோடும் புகுந்தார். அறைக் கதவை மூடிக்கொண்டு முருக உபாசனையில் முனைந்தார். உண்ணும்போது தவிர மற்றபோதுகளில் வெளியே வருவதில்லை. உறக்கமும் உள்ளேயே கொள்வார். இவ்வாறு பல நாட்கள் தியானத்திலிருக்கையில் ஒரு நாள் சுவரிலிருந்த கண்ணாடியில் தணிகை முருகன் தோன்றிக் காட்சியளித்தான். அக்காட்சியைக் குறிப்பதே சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் என்னும் பாடலாம். சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும் ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும் அருட்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும் என் கண்ணுற்றதே
-ஐந்தாம் திருமுறை பிரார்த்தனை மாலை

கன்னிச்சொற்பொழிவு


கன்னிச்சொற்பொழிவு

தமையனார் சபாபதி அவர்கள் சோமு செட்டியார் வீட்டில் புரான சொற்பொழிவு ஆற்றி வந்தார் சபாபதி நோய்வாய்படவே சோமு செட்டியார் வீட்டில் நிகழ்ந்த சொற்பொழிவு தடைபட்டது.சபாபதி தம்பியை அனுப்பி ஓரிரு பாடல்களைப் பாடி வழிபாடு செய்து முடித்துவரப் பணித்தார். அவையோரோ பெருமானாரையே சொற்பொழிவாற்ற வேண்டினர். பெருமானார் அற்றை நாளுக்குரியதாகிய திருஞான சம்மந்தர் புராணத்தை இரவு நெடு நேரம் வரை சொற்பொழிவாற்றினார். அன்று முதல் பெருமானாரையே தொடர்ந்து சொற்பொழிவாற்றுமாறு அனைவரும் வேண்டினர். அதற்கிசைந்து பெருமானார் சிலகாலம் சொற் பெருக்காற்றினார்.

ஒன்பதாம் அகவையில் ஆட்கொள்ளப் பெற்றது


ஒன்பதாம் அகவையில் ஆட்கொள்ளப் பெற்றது

வள்ளற்பெருமானார், தம் ஒன்பதாம் ஆண்டில் இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றார். "என்னை ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டுகொண்ட அருட்கடலே", ஆறொடு மூன்றாண்டாவதிலே முன்னென்னை ஆண்டாய்" என்பன அகச்சான்றுகள். "என்னையறியாப் பருவத்தாண்டு கொண்ட என் குருவே", என்னைச்சிறுகாலை ஆட்கொண்ட தேவதேவே", "எனையறியா இளம் பருவந்தனிலே பரிந்து வந்து மாலையிட்டான்", ஏதும் ஒன்றறியாப் பேதையாம் பருவத் தென்னை ஆட்கொண்டு", "தெருவிடத்தே விளையாடித்திரிந்த எனை வலிந்தே சிவமாலை அணிந்தனை", "அற்றமும் மறைக்கும் அறிவிலாதோடி ஆடிய சிறு பருவத்தே குற்றமும் குணங்கொண்டென்னை ஆட்கொண்ட குணப்பெருங் குன்றமே" என்பவற்றால் சிறு பருவத்தே இறைவன் பெருமானாரை ஆட்கொண்டு அருளினான் என்பது தெரிய வருகின்றது.

பன்னிரண்டாம் அகவையில் முறையான "அருளியல் வாழ்வு தொடங்கியது"


பன்னிரண்டாம் அகவையில் முறையான "அருளியல் வாழ்வு தொடங்கியது"

"பன்னிரண்டாண்டு தொடங்கி நான் இற்றைப் பகல் வரை அடைந்தவை எல்லாம்", "ஈராறாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே" என்னும் அகச்சான்றுகளால் பெருமானார் தமது பன்னிரண்டாம் ஆண்டு முதல் முறையான அருளியல் வாழ்க்கையைத் தொடங்கினார்கள் என்பது அறியப் பெறும்.

திருவொற்றியூர் வழிபாடு


திருவொற்றியூர் வழிபாடு

"பன்னிரண்டாம் அகவையில் முறையான அருளியல் வாழ்க்கையைத் தொடங்கிய பெருமானார் நாள்தோறும் திருவொற்றியூர் சென்று தியாகராஜப் பெருமானையும், வடிவுடையம் மையையும் வழிபட்டு வரத் தொடங்கினார்கள். சென்னையை விட்டு நீங்கிய முப்பத்திந்தாம் அகவை வரை இருபத்து மூன்றாண்டு காலம் பெருமானார் ஒற்றியூரை வழிபட்ட வண்ணமிருந்தார்கள். தொழுவுர் வேலாயுதனாரால் வகுக்கப் பெற்ற முதல் திருமுறையிலுள்ள வடிவுடைமாணிக்க மாலையும் இங்கிதமாலையும், இரண்டாம் திருமுறையின் பெரும்பகுதியும், மூன்றாம் திருமுறை முழுவதும் ஒற்றியூர் வழிபாட்டுக் காலத்தில் ஒற்றியூர் இறைவன் மேற் பாடப் பெற்றவையாம். தொ.வே. வகுத்த ஐந்தாம் திருமுறையாகிய திருத்தணிகைப் பதிகங்கள் ஒற்றியூர் வழிபாட்டுக் காலத்திற்கு முன் திருத்தணிகையைக் குறித்து, அங்குச்சென்று வழிபட்டும், சென்னையிலிருந்து வாறும் பாடப்பெற்றவையாகும். இக்காலத்தில் இடையிடையே திருவலிதாயம், திருமுல்லைவாயில் முதலிய தலங்களுக்கும் சென்று இரவு காலங்கடந்து சென்னை திரும்பித் திண்ணையில் பசியோடே படுத்து அயர்ந்தபோது வடிவுடையம்மை அண்ணியார் வடிவில் தோன்றி அமுதளித்தருளினார். தெற்றியிலே நான் பசித்து படுத்திளைத்த தருணம்
திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி
உவந்துகொடுத்தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே
பற்றிய என் பற்றனைத்தும் தன் அடிப் பற்றாப்
பரிந்தருளி எனை ஈன்ற பண்புடைஎந் தாயே
பெற்றியுள்ளார் சுற்றி நின்று போற்றமணிப் பொதுவில்
பெருநடஞ்செய் அரசே என் பிதற்றும் உவந்தருளே
- ஆறாம் திருமுறை அருள்விளக்க மாலை - 866

வேலாயுதனார் மாணவரானது


வேலாயுதனார் மாணவரானது

1849 ஆம் ஆண்டில் தொழுவூர் வேலாயுதனார் பெருமானாரின் மாணாக்கராயினார். அப்போது பெருமானாரது வயது இருபத்தாறு. வேலாயுதனார்க்கு வயது பதினேழு. பெருமானாரின் புலமையில் அவ்வளவாக நம்பிக்கையற்ற வேலாயுதனார் கடின நடையில் தாமே நூறு செய்யுள்கள்.

பாடஞ் சொல்லல்


பாடஞ் சொல்லல்

தொழுவூர் வேலாயுதனார், இறுக்கம் இரத்தினம் முதலியார், பொன்னேரி சுந்திரம், நரசிங்கபுரம் வீராசாமி காயாறு ஞானசுந்திரம் ஐயா, கிரியாயோக சாதகர் பண்டார ஆறுமுக ஐயா ஆகியோர் பெருமானிடத்தில் பாடங் கேட்டார். பண்டார ஆறுமுக ஐயா விநாயக புராணம் முழுவதையும் பாடங் கேட்டனார். இவர்களுள் தொழுவூர் வேலாயுதனார் உபய கலாநிதிப் பெரும்புலவர் என்று பட்டம் பெற்று சிறப்புற்றார். திருவருட்பாவைப் பதிப்பித்தார். பல நூல்களை இயற்றினார். பெருமானார் இறைவடிவம் பெற்றபின் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராக விளங்கனார். இறுக்கம் இரத்தினம் பள்ளி ஆசிரியரானார். வீராசாமி சில இலக்கண நூல்களைப் பதிப்பித்தார்.சுந்திரம் புராண சொற்பொழிவாற்றுவதில் வல்லவராகிப் புராணிகர் பொன்னேரி சுந்திரம் என வழங்கப்பெற்றார். இங்ஙனம் பெருநூல்களைத் தக்கார்க்குப் பாடஞ்சொல்லும் போதகாசிரியாராக விளங்கிய பெருமானார் சிறுவர்களை சேர்த்து நீதி நூல்களையும் பயிற்றுவித்தார்கள்.

நூல்கள் பதிப்பித்தல்


நூல்கள் பதிப்பித்தல்

ஒழிவிலொடுக்கம் (1851), தொண்டமண்டல சதகம் (1856), சின்மய தீபிகை(1857) ஆகிய மூன்று நூல்களும் சென்னை வாழ்வில் வள்ளற் பெருமானாரால் பதிப்பிக்கப் பெற்றவை.

நூல்கள் இயற்றல்


நூல்கள் இயற்றல்

உடைநடை நூல்கள் அரிதாகத் தோன்றத் தோடங்கிய அக்காலத்தில் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் இரண்டு உரைநடை நூல்களை எழுதியருளினார்கள். மனுமுறை கண்ட வாசகம் 1854 இல் வெளியாயிற்று. ஜீவகாருண்ய ஒழுக்கம் பெருமானார் அருட்பெருஞ்ஜோதி நிலைப் பெற்ற பின்னர் 1879 இல் அச்சாயிற்று.

சாற்றுக்கவி அளித்தல்


சாற்றுக்கவி அளித்தல்

அக்காலத்தில் நூல் செய்வோர் பெரும் புலவர்களிடத்தில் சாற்றுக்கவி (அணிந்துரை) பெறுதல் வழக்கம். வள்ளற் பெருமானார் விரும்பவில்லை. தேட்டில் மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்றுளம் பயந்தார்கள். இதன் விளைவாகத் தமது முப்பத்தைந்தாம் அகவையில் 1858 ஆம் ஆண்டில் ஒருநாள் சென்னை வாழ்வை நீத்துத் தலயாத்திரையாகப் புறப்பட்டு வழியிலுள்ள தலங்களையெல்லாம் வழிபட்டுக் கொண்டு தில்லையை(சிதம்பரம்) அடைந்தார்.

கருங்குழியில் உறைதல் - (1858 - 1867)


கருங்குழியில் உறைதல் - (1858 - 1867)<

தில்லையில் பெருமானாரைக் காண நேர்ந்த கருங்குழி மணியக்காரர் வேங்கடரெட்டியார் தம்மூர்க்கு வருமாறுஅழைத்தார். பெருமானாரும் கருங்குழிக்கு எழுந்தருளினார். வேங்கடரெட்டியார், பெருமானாரை அன்போடு வரவேற்று உபசரித்துக் கருங்குழியில் தம் இல்லத்திலேயே தங்கியருள வேண்டினார். ரொட்டியாரின் உண்மை அன்பை உணர்ந்த பெருமானார் அவரது விருப்பத்திற் கிணங்கக் கருங்குழியில் அவரில்லத்திலேயே தங்கினார்கள். 1858இல் கருங்குழிக்கு வந்தது முதல் 1867 இல் தருமச்சாலையை வடலூரில் ஏற்படுத்தும்வரை கருங்குழியே பெருமானாரின் உறைவிடமாயிற்று. இக்காலத்தில் அடிக்கடி பெருமானார் சிதம்பரம் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டார்கள். திருமுதுகுன்றம், திருவதிகை, திருவண்ணாமலை முதலிய தலங்களுக்கு சென்றும் வழிப்பாட்டுக் காலம் எனலாம். நாங்காம் திருமுறையும் ஆறாம் திருமுறையின் முன்பகுதிப் பதிகங்களும் இக்காலத்தில் பாடப்பெற்றவை.

நீரால் விளக்கெரிந்தது


நீரால் விளக்கெரிந்தது

கருங்குழி வீட்டின் அறையில் ஒரு நாள் இரவு பெருமானார் எழுதிக் கொண்டிருக்கும் போது விளக்குமங்கவே, எண்ணெய் செம்பென எண்ணித் தண்ணீர் செம்பை எடுத்து விளக்கில் வார்த்தனர். விளக்கும் இராமுழுவதும் நன்கு எரிந்தது. தண்ணீர் விளக்கெரிந்த இவ்வற்புதத்தைப் பெருமானாரே ஒரு பாடலிற் குறித்துள்ளனர். மதுரை ஆதீனம் சிதம்பர சுவாமிகளும் திருவருட்பாவின் சிறப்பாகப் பாடிய செய்யுளில் தண்ணீர் விளக்கெரிந்த தன்மையைக் குறித்துள்ளார்.

சமரச சன்மார்க்க சங்கம் - 1865


சமரச சன்மார்க்க சங்கம் - 1865

வள்ளற்பெருமானார் சமரச சுத்த சன்மார்க்கம் என்ற ஒரு நெறியை இக்காலத்தி எற்படுத்தினார்கள். கடவுள் ஒருவரே என்பதும் அவரை உண்மை அன்பால் ஒளி (ஜோதி) வடிவில் வழிபட வேண்டுமென்பதும், சிறு தெய்வ வழிபாடு கூடாதென்பதும், அத்தெய்வங்களில் பேரால் உயிர்ப்பலி கூடாதென்பதும், புலால் உண்ணலாகா தென்பதும், சாதி சமய முதலிய எவ்வகை வேறுபாடும் கூடாதென்பதும் எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைக் கைக்கொள்ள வேண்டுமென்பதும் எழைகளின் பசி தவிர்த்தலாகிய சீவகாருணிய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்பதும், புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டாதென்பதும், இறந்தவரைப் புதைக்க வேண்டும், எரிக்கக் கூடாதென்பதும், கருமாதி திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டாமென்பதும் பெருமானாரின் சமரச சன்மார்க்கக் கொள்கைகளாம். இக்கொள்கைகளைப் பின்பற்றவும் பரப்பவும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற ஒரு சங்கத்தை 1865 ஆம் ஆண்டில் கருங்குழியில் நிறுவினார்கள்.

சத்திய தருமச்சாலை - (23-5-1867)


சத்திய தருமச்சாலை - (23-5-1867)

23-5-1867 பிரபவ வைகாசி மாதம் 11 வியாழக்கிழமை அன்று அழிபசி தீர்த்தலாகிய ஜீவகாருண்ய பேரறத்தை நடத்துவதற்காக வடலூரில் சத்திய தருமச்சாலையை வள்ளற்பெருமானார் நிறுவினார்கள்.

ஆரம்ப காலந்தொட்டு தருமச்சாலையில், சாதி, மதம், இனம், மொழி, தேசம், நிறம், இன்னபிற பேதமின்றி அனைவருக்கும் சமமாகத் தினசரி மூன்று வேளையும் பெருமானார் அருள்நெறி பரவ அன்னதானம் வழங்கப்படுகின்றது.

தருமச்சாலைக்குத் தொடக்கத்தில் சமரச வேத தருமச்சாலை எனப் பெயரிடப்பெற்றது. பின்னாளில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை எனப் பெயர் மாற்றப் பெற்றது. 1867 முதல் 1870 வரை நான்காண்டு காலம் தருமச்சாலையில் வள்ளற்பெருமானார் உறைந்தார்கள். பெருமானாரைப் பொறுத்தவரை சத்திய தருமச்சாலை தவச்சாலையாகவும் திகழ்ந்தது.

சன்மார்க்க சங்கத்தாரின் இறை வழிபாட்டிற்கும் பிற பணிகளுக்கும் தருமச்சாலையே இடமாயிற்று. தருமச்சாலை சன்மார்க்க சங்கத்தின் அலுவலகமுமாயிற்று. கடலூர் (துறைமுகம்) மு.அப்பாசாமி செட்டியார், சண்முகம் பிள்ளை, நமசிவாயம் பிள்ளை, கல்பட்டு ஐயா முதலான அன்பர்கள் சாலையில் இருந்து தொண்டாற்றினார்கள். அன்பர்கள் சாலையில் இருந்து தொண்டாற்றினார்கள். அன்பர்கள் உதவிடும் பொருள்களால் தருமச்சாலை தொடர்ந்து ந்டைபெறுவதாயிற்று. தருமச்சாலையில் தம் பெற்ற பெரும் பேறுகளைப் பற்றிப்பெருமானார் அருளியவை வருமாறு. காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்
சாகா வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும்
ஏகா நினக்கடிமை ஏய்ந்து
- ஆறாம் திருமுறை - 627
என்பாட்டுக் கெண்ணாதது எண்ணி இசைத்தேன் என்
தன்பாட்டை சத்தியமாத் தான் புனைந்தான் - முன்பாட்டுக்
காலையிலே வந்து கருணை அளித்தே தருமச்
சாலையிலே வா என்றான்தான்
- ஆறாம் திருமுறை - 772
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே
களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும்பயனாம் விளைவை எலாம் தருமச்
சாலையிலே ஒரு பகலில் தந்ததனிப் பதியே
சமரச சன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்தமொழி மாலை அணிந்தாடும்
மாநடத்தென் அரசே என் மாலையும் அணிந்தருளே
- ஆறாம் திருமுறை - 915

திருஅருட்பா வெளியீடு - (1867)


திருஅருட்பா வெளியீடு - (1867)

வள்ளற்பெருமானாரின் அணுக்கத் தொண்டர் இறுக்கம் இரத்தினம் திருஅருட்பாவை வெளியிடுவதில் 1860 ஆம் ஆண்டு முதல் ஏழு ஆண்டுகள் முயன்றார்; அச்சிட அனுமதி வேண்டிப் பெருமானாரிடம் தவம் கிடந்தார். நாளும் ஒருவேளையே உண்பது என்ற நோன்பு பூண்டார். இவ்வாறு வருந்தி வருந்தி அரிதின் முயன்று திருஅருட்பாவை அச்சிட்டு 1867-ல் வெளிக்கொணர்ந்த பெருமை இறுக்கம் இரத்தினம் என்பவரையே சாரும்.

1867-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்த திருஅருட்பா முதல் நான்கு திருமுறைகள் பதிப்பின் முகப்பேட்டில் முதல் முதலாகத் திருவருட்பிரகாச வள்ளலாரென்னும் சிதம்பரம் இராமலிங்க பிள்ளை அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய "திருவருட்பா" என அச்சிடப்பெற்றது.

வள்ளற் பெருமானார் அருளிய பாடல்களுக்குத் திருஅருட்பா என்றும் அதன் பகுதிகளுக்குத் திருமுறை என்றும் நமது பெருமானாருக்குத் திருவருட்பிரகாச வள்ளலார் என்றும் பெயரிட்ட பெருமையும் புண்ணியமும், உபய கலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார் அவர்களையே சாரும்.


கோயில் விவரங்கள்

திரு அருட்பிரகாச வள்ளலார் கோயில்

வடலூர் - 607303

vallalardheivanilayam@gmail.com

Maintained By

AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,

kumbakonam - 612001

Designed by AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,

Designed by

AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,